User Tools

Site Tools


உற்பத்தியாளர்_நிறுவனம்

உற்பத்தியாளர் நிறுவனம்


விவசாயிகளின் தற்போதைய நிலை..

விவசாயிகளான நாம் ஒரு மதிப்பான வருமானத்தை எதிர்பார்த்து விவசாயம் செய்கிறோம், தீவிரமாக உழைக்கிறோம், ஆனாலும் அதன் பலன் என்னவோ கடைசியில் வாங்கி விற்கும் இடைத்தரகர்களுக்கும் வியாபாரிகளுக்கும்தான் கிடைக்கிறது. வருடம் முழுதும் உழைப்பவனுக்கு உழைப்பின் கூலிகூட மிஞ்சுவதில்லை. இந்த சூதாட்டத்தில் நஷ்டம் வந்தால் முழுதும் விவசாயிக்கு, லாபம் வந்தால் அதில் பெரும்பகுதி தரகர்களுக்கும், வியாபாரிகளுக்கும். இதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை. யாரையும் குறை சொல்லி பயனில்லை. ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்ற ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

இதற்கு தீர்வு என்ன?

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, நமக்கு திறமையிருக்குமானால் ஒரு மிகச்சிறந்த நிறுவனத்தை நம்மால் உருவாக்க முடியும். அரசு உற்பத்தியாளர்களுக்கென தனியாக “உற்பத்தியாளர் கம்பெனி” என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் சேர்ந்து விவசாயிகளுக்கென தனியாக ஒரு கம்பெனி ஆரம்பிக்கவும், அதில் அரசும் பிற தனியார் நிறுவனங்களும் தலையிடாமல் இருக்கவும் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாளர்கள் அல்லாதவர்கள் இணைய முடியாது, உற்பத்தியாளர் கம்பெனியை மற்ற தனியார் கம்பெனிகள் வாங்கவும் முடியாது. இது எப்போதும் விவசாயிகளின் நிறுவனமாகவே இருக்கும். அவரவர் கொடுக்கும் விளைபொருட்களின் பங்கிற்கேற்ப லாபத்தில் அவர்களுக்கு பங்கு கிடைக்கும், இதை நிர்வகிப்பதுவும், இயக்குவதுவும் உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள் குழு மட்டுமே.

ஓர் உதாரணம்

அதாவது, ஒரு ஊரில் இருக்கும் 50 பால் மாடு வைத்திருக்கும் விவசாயிகள் ஒவ்வொருவரும் சுமார் 5 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களால் நேரடியாக அருகிலிருக்கும் பட்டினத்திற்கு கொண்டுபோய் விற்க முடியாது. ஆனால் ஒரு வியாபாரி இந்த 250 லிட்டர் பாலையும் 25ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதனை ஒரு தொழிலாக 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். அதுதான் இப்போது நடக்கிறது. இதனை விவசாயிகள் ஒரு குழு அமைத்து செய்ய முடியும். ஒவ்வொருவரும் ஆளுக்கு 5000 ரூபாய் ஒரு கூட்டு என பங்கு போட்டு ஒரு 2.5லட்சத்தை திரட்டி, அதனை கொண்டு ஒரு 25000 ரூபாயில் deep freezer மற்றும் சுமார் 1லட்ச ரூபாயில் மில்க் பாக்கெட் செய்யும் இயந்திரங்களை வாங்கி தினம் 250 லிட்டரை பாக்கெட் பண்ணி, பட்டினத்தில் கமிஷன் முறையில் மளிகை கடைகள் வாயிலாக விநியோகம் பண்ணலாம். தினம் ஒரு விவசாயி இதை ஒரு ஆம்னியை வாடகைக்கு எடுத்து கொண்டு செய்வதாகவும் அவருக்கு ஒரு நாள் கூலி கொடுப்பதாவும் கொள்க, லிட்டருக்கு ரூபாய் 15 லாபம் வைத்து விற்கலாம், கமிஷன்,வாடகை,மின்சாரம்,பாக்கெட் செலவு என லிட்டருக்கு ரூபாய் 5 செலவானாலும், லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் லாபம் கிடைப்பதாக கொண்டால் ஒரு விவசாயியின் பங்கு தொகை 3 ½ மாதத்தில் அவருக்கு திரும்ப கிடைத்துவிடும். பிறகு கிடைப்பதெல்லாம் ஒவ்வொரு விவசாயிக்கும் மாதம் தோறும் 1500 ரூபாய் லாபம். இதனையே ஒரு உற்பத்தியாளர் கம்பெனி மூலமாக செய்தால், அடுத்து பால் அதிகமாக உற்பத்தியாகும் போது அதிலிருந்து பனீர்,வெண்ணை,மோர்,தயிர் போன்ற பொருட்களை செய்து விற்கலாம்.மொத்தமாக மலிவாக மாட்டு தீவனம், நுண்ணூட்ட உப்பு வாங்கி அனைவரும் பயன்படுத்தலாம். இன்னும் அதிகம் பேர் சேர்ந்தால் தனியாக பொருட்கள் வாங்கி நமே தீவனத்தை அரைக்கலாம். தானியங்களை கொண்டு சத்து மாவு,புட்டு மாவு,ரெடிமிக்ஸ் போன்றவை செய்து விற்கலாம். உள்ளூரிலேயே நம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம். நம் கம்பெனி நம் முடிவு.

உற்பத்தியாளர் நிறுவனத்தை எப்படி ஆரம்பிப்பது?

10 அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்தியாளர்கள் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கலாம். உற்பத்தியாளர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக இருக்க முடியும், எனவே எவ்வளவு விவசாயிகள் சேர்ந்தால் இந்த நிறுவனத்தை லாபமாக நடத்த முடியும் என்பது ஒவ்வொரு விவசாயிகளின் விளைபொருட்கள் உற்பத்தி அளவை பொறுத்தே இருக்கும். தலா ஒரு ஏக்கர் உள்ள 10 விவசாயிகள் கம்பெனி ஆரம்பித்து லாபம் ஈட்டுவது கடினம், அதே 200 பேரோ அல்லது 500 பேரோ இணைந்து செய்தால் வாய்ப்பு அதிகம். அப்படி இணையும் ஒவ்வொருவரும் இந்த நிறுவனத்தை தொடங்க தன் பங்கை பணமாக செலுத்த வேண்டும், அவர்கள் கொடுக்கும் பங்கு மூலதனம்தான் அந்த நிறுவனத்தில் அவர்களின் பங்கு. மொத்த பங்கின் மதிப்பை கம்பெனியின் பங்கு மூலதனம் என்பர். பின்னர் நம் கம்பெனிக்கு சட்ட திட்டங்களை வகுத்தது, அதற்கு குறைந்தது 5 இயக்குனர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் வேறு யாருமல்ல நம்மில் இருந்து 5 பேரை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் 3 மாத்திற்கு ஒருமுறையாவது கூடி கம்பெனியின் நடவடிக்கைகளை கவனிப்பர். இவர்களுக்கு மாத சம்பளம் கிடையாது. இவர்கள் கம்பெனியை தினசரி நடத்த ஒரு தலைமை செயல் அதிகாரியை (CEO ) தேர்ந்தெடுப்பர், அவரே நிர்வாகத்தை தினசரி நிர்வகிப்பவர், அவருக்கு மாத சம்பளம் உண்டு, அவருக்கு துணையாக கம்பெனி வேலைகளை செய்ய மாத சம்பளத்தில் ஆட்களை நியமித்து கம்பெனியை நடத்தலாம்.

எவ்வளவு செலவாகும்?

இது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல செயல்படுவதால், இதனை ஆரம்பிக்க,நடத்த சற்று செலவு பிடிக்கும். வருடம் தோறும் கணக்குகளை ஆடிட்டர் கொண்டு சரிபார்க்க வேண்டும், வரவு செலவு , லாப நஷ்ட கணக்குகளையும், நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அரசின் கம்பெனி பதிவாளருக்கு அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும். சுமாராக இந்த கம்பனியை ஆரம்பிக்க 40,000 ரூபாயும், வருடம் சுமார் 20,000 ரூபாயும் ஆகும் .

வரி எவ்வளவு கட்டவேண்டும்?

பொருட்களை விற்கும் போது அதற்குண்டான GST வரி கட்டவேண்டும் (உதாரணத்திற்கு, பால்,கீரை,அரிசி,பருப்பு,இறைச்சி -GST வரி இல்லை, வெண்ணை,நெய்-GST 12%). வருமானத்தில் கட்டிடம்,இதர பொருட்களின் தேய்மானம், நிறுவனத்தில் உள்ள அனைவரின் சம்பளம், வண்டி வாடகை, இதர செலவுகள் போக வரும் நிகர வருமானத்தில் 30% வருமான வரியாக கட்டவேண்டும். GST என்பது உற்பத்தி மற்றும் விற்பனை வரி- இதற்கு கம்பெனியின் விற்றுமுதல் 20லட்சத்திற்கு அதிகம் இருந்தால் GSTல் பதிவு செய்யவேண்டும். 75 லட்சத்திற்கு அதிகம் இருந்தால் மேற்கண்ட வரியினை மாதாமாதம் செலுத்தவேண்டும். 75லட்சத்திற்கு குறைவாக 20லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் விற்றுமுதலில் 2% வரி 3 மாதத்திற்கு ஒருமுறை செலுத்தவேண்டும்.

எவை விவசாய வருமானம் எவை வியாபார வருமானம்?

விதை போட்டு அல்லது நாற்று நட்டு தண்ணீர் விட்டு பாதுகாப்பு செய்து விளைவித்த பொருட்கள் மட்டுமே விவசாய விளைபொருட்கள். அதனால் வரும் லாபத்திற்கு மட்டுமே வருமான வரி கிடையாது. உதாரணமாக கீரை விற்றால் வரும் வருமானத்திற்கு கிடையாது. பால் வியாபாரம்,ஆடு,மாடு,கோழி வியாபாரம் போன்றவற்றால் வரும் வருமானத்திற்கு வரி உண்டு.

ஏன் உற்பத்தியாளர் நிறுவனம்?

பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல செயல்படுவதால் இதற்கு சாதாரண நிறுவனங்களைவிட மதிப்பு அதிகம். உறுப்பினர்கள் தந்தைக்கு பிறகு மகன் என மாறினாலும், கம்பெனி அதன் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய சொத்தாக விளங்கும். நம் கம்பெனியின் சட்டத்தில் உள்ளதுபோல நாம் அதற்கு விளைபொருட்களை கொடுக்க வேண்டும், நாம் உற்பத்தியாளராக இல்லையெனில், விளைபொருட்கள் கொடுக்கவில்லையெனில் கம்பெனியில் உள்ள நம் உறுப்பினர் தகுதி பறிபோகும். பங்கின் அப்போதுள்ள மதிப்பை கொடுத்து நம் பங்கு மூலதனத்தை உற்பத்தியாளர் நிறுவனம் திரும்ப வாங்கிக்கொள்ளும்.

வேறு மாற்று வழி என்ன?

  • சங்கம் அமைத்தல்
  • அறக்கட்டளை அமைத்தல்
  • LLP கூட்டு நிறுவனம் அமைத்தல்

இவற்றை பற்றி விரிவாக மற்றொரு கட்டுரையில் காண்போம்.

நிறுவனத்தை லாபகரமாக நடத்த தேவையான முக்கிய கோட்பாடுகள்

  • யார் யார் உறுப்பினர் ஆகலாம் என வரையறை செய்தல்.
  • உறுப்பினர்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தருதல்.
  • ஒரு முடிவை ஏகமனதாக எடுக்க முடியாத பட்சத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை ஏற்றுக்கொள்தல், அல்லது அதன் மீதான வாக்கெடுப்பை தள்ளிவைத்தல்.
  • அறிவியல் பூர்வமான, உண்மையான கருத்துக்களை மட்டுமே கொண்டு முடிவினை எடுத்தல்.
  • தரவுகளை(data), உறுப்பினர்களின் கருத்துக்களை, குழுவின் முடிவுகளை ஆவணப்படுத்தல்.
  • குழுவின் செயல்பாடுகளை, அளவிடக்கூடிய மற்றும் வெளிப்படையான தரவுகளைக் கொண்டு மதிப்பிடுதல்.
  • குழுவாக இயங்கி ஒரு முடிவினை எட்டுதல், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல்.
  • இலக்கை நிர்ணயித்தல் - அளவிடக்கூடிய இலக்கை நிர்ணயித்தல், சிறு சிறு குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் தொலைநோக்கு இலக்கை நிர்ணயித்தல்.
  • தவறுகளை தட்டிக் கழிக்காது ஏற்று அதனை எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது என ஆராய்தல்.
  • எதிர் கருத்து கொண்டிருந்தாலும் குழுவின் முடிவுக்கு மதிப்பளித்து அதனை நிறைவேற்றுதல்.
  • குழுவின் முடிவுக்கு உட்பட முடியாத பட்சத்தில் அதிலிருந்து நியாயமாக வெளியேற ஒருவருக்கு வாய்ப்பளித்தல்.
  • குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செயல்பாடுகளை மட்டும் செயல்படுத்துதல்.
  • குழுவின் செயல்பாடுகளுக்கு போட்டியாக செயல்படும் அல்லது உறு விளைவிக்கும் உறுப்பினர்களை தீர்மானம் மூலம் நீக்குதல்.
  • குழுவிற்கு குறைந்தது 5 இயக்குனர்களை தேர்தெடுத்தல். அவர்கள் குழுவின் சார்பாக செயல்பட அதிகாரம் அளித்தல்.

பயன்கள்

  • கிராமத்திற்கு தேவையான வீடு கட்டும் நுகர்பொருட்களை மொத்தமாக வாங்கமுடியும்.
  • பொது உணவகம்,மருந்தகம்,நூலகம் அமைக்கலாம்.
  • இயற்கை உரம் பூச்சி விரட்டிகளை நாமே மொத்தமாக தயாரித்துக்கொள்ளலாம்.
  • நம் விளை பொருட்களை மதிப்பு கூட்டி நாமே விற்பனை செய்யலாம்.
உற்பத்தியாளர்_நிறுவனம்.txt · Last modified: 2017/08/11 11:06 by admin